சனி, ஞாயிறு என் சொந்த ஊரான விருதுநகரில் நண்பன் வீட்டுத் திருமண விழாவில் இனிதே கடந்தது. ஏழு வருடங்களுக்கு முன் நான் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்த போது எப்படி இருந்ததோ அதே மாதிரி இருந்தது. வழிகள் கண்டுபிடிக்க சிறிதளவும் கடினம் இல்லை. சின்ன வயதில் இருந்து நான் திரிந்த அதே தெருக்கள், சாலைகள். அதே பானு ஹோட்டல், ஆரோக்கியராஜ் மிட்டாய் கடை, பத்மா பேக்கரி, அப்சரா தியேட்டர், காளிமார்க், SNB & சன்ஸ், ஆஞ்சநேய விலாஸ், சேது’ஸ் புக் ஷாப்..
துருப்பிடித்த பெயர்ப்பலகைகள் எனது ஊரின் வயதைச் சொல்லின.. ஆங்காங்கே சாலைகள் குறுக்கே தோண்டப்பட்டு மறுபடியும் தார் பூசாமல் அவசர கதியில் மூடி இன்னும் மோசமாக இருந்தன. பல வருடங்கள் ஆகியும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அநேகமாக கடைசியாக எங்கள் ஊரில் செய்யப்பட்ட ஒரு நல்ல விஷயம் கருமாரி மடம் பக்கத்தில் போடப்பட்ட பாலமாகத் தான் இருக்க வேண்டும்..
ஆங்காங்கே ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிய இணைப்பு "HDFC Bank". நல்ல விஷயம்: தங்கும் விடுதிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
வழக்கம் போல், வாடியன் கேட்-க்கும் எம்.எஸ்.பி. பூங்காவுக்கும் இடையில் இருக்கும் பெரிய பெரிய நாடார் வீடுகள்..சில பராமரிக்கப்பட்டும், சில பராமரிக்கப்படாமலும்.. எம்.எஸ்.பி பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணிக்கு சிலர் ஷட்டில் கார்க் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..
பத்து மணி நேர மின்வெட்டு பழகிப்போயிருந்தது.. நண்பனின் அண்ணன் திருமணம் ‘பம்பாய் அரங்கில்’.. நாடார் வீட்டுத் திருமணம் என்பதால் மூன்று நாட்கள் மண்டபத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பாடு மிகவும் அருமை :)
ஞாயிற்றுக் கிழமை காலையில் கல்யாணம் முடிந்தது. நானும், நண்பனும் மதிய நேர மின்வெட்டில் இருந்து தப்பிக்க அப்சரா திரையரங்கில் ‘அரவாண்’ பார்க்கத் திட்டமிட்டோம். எங்கள் ஊர் திரையரங்கில் எங்கள் ஊர் இயக்குநர் இயக்கிய திரைப்படம் :) திரையரங்கு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது, திரை சற்று அழுக்காக படம் கொஞ்சம் மங்கலாய்த் தான் இருந்தது. கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிடவே சிறுவயதில் அம்மாவுடன் படத்திற்கு வருவதுண்டு. இடைவேளையின் போது அப்போது பார்த்த அதே ஐஸ்கிரீம் இயந்திரம். “வாழ்வே மாயம்” படத்தின் முற்பாதியில் வரும் ”கமலும், ஸ்ரீதேவியும்,” நான் சிகப்பு மனிதன் “ரஜினி”யும் கையில் கோன் ஐஸுடன் போஸ் கொடுத்தனர். அந்தப் பக்கம் “தாவணிக் கனவுகள்” பாக்யராஜ், முந்தி காஃபி விற்கும் இடத்தில்.. பழைய படங்களின் நூறாவது நாள் ஷீல்டுகள் தரைத்தளத்தின் கதவுகளுக்கு மேல்..
படம் முடிந்து நண்பனின் வீட்டுக்குச் செல்லும் போது சிறிது சீரணியும், காராச்சேவும் ஆரோக்கியராஜ் மிட்டாய்க் கடையில் வாங்கிக் கொண்டோம். அதே விருதுநகர் பஜார், இப்போது, கடைகளுக்கு முன்னிருந்த கொட்டகைகளை நீக்கியிருந்தார்கள். தெப்பக்குளம் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது, ஆனால் தண்ணீர் கலங்கலாய்த் தெரிந்தது.
ஊருக்குள் எங்கு போகவேண்டுமானாலும் அதிகம் பத்து நிமிடம் போதும் வண்டியில், எனது ஊரின் அத்தனைத் தெருக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன.
இரவுச் சாப்பாடு மண்டபத்தில் முடித்து விட்டு கிளம்பிவிட்டேன். இரண்டு நாட்கள் மிக வேகமாக முடிவுற்றது. இரண்டு நாட்களும் கல்யாண வீட்டில் வேலை இருந்ததால் கோவில்களுக்கு போகமுடியவில்லை.. புகழ்பெற்ற “விருதுநகர் புரோட்டாவும்” இந்த முறை சாப்பிடமுடியவில்லை.
எப்படியாவது பங்குனிப் பொங்கலுக்குப் போகவேண்டும். தீச்சட்டி பார்க்கவேண்டும். பொருட்காட்சிக்குப் போய் ராட்டினம் ஏற வேண்டும். ‘புரோட்டா’ சாப்பிட வேண்டும். :)
அநேகமாக அடுத்த பயணம் நண்பன் “ராஜா அண்ணாமலை” கல்யாணத்திற்குத் தான் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக ஊருக்குப் போக வேண்டும்.
சொர்க்கமாக இருந்தாலும் சொந்த ஊர் போல் வருமா??

