இரண்டே ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் சம்பாதித்து அமெரிக்காவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் இரண்டு இளைஞர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சான்பிரான்ஸிஸ்கோவில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது இன்ஸ்டாக்ராம் (Instagram). தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். இவர்களது கனவுக் குழந்தையான இன்ஸ்டாக்ராமை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது. விலைதான் இங்கே விஷயமே. ஒரு பில்லியன் டாலர். அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய்.
கெவின் சிஸ்ட்ரோம், 2006ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவர். கூகுளில் சில காலம் பணிபுரிந்துவிட்டு, பிற்பாடு ட்விட்டர் தளம் உருவாகியபோது அதில் பணியாற்றினார். இன்னொருவர் மைக். இவரும் ஸ்டான்போர்டில் 2008ல் பட்டம் வாங்கியவர். கெவினை விட இளையவரான இவர் இன்ஸ்டாக்ராம் தொடங்குவதற்கு முன்பாக ஏதோ ஒரு சுமாரான நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றினார்.
ஸ்டான்போர்டின் முன்னாள் மாணவர்கள் என்கிற ஒற்றுமை தவிர்த்து, இருவரையும் இணைத்தது ஒரு கனவு. சொந்தமாக ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பணிகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று பல்வேறு யோசனைகளை பரிசீலித்தார்கள். கடைசியாக மொபைல் கேமராவில் எடுக்கப்படும் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எளிமையான ஒரு அப்ளிகேஷனை உருவாக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஏற்கெனவே யாஹூவின் ஃப்ளிக்ஆர் இணையதளம் உலகின் முதல் ஐம்பது இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கிறது. போட்டோக்களை பகிர்ந்துகொள்ள ஏராளமான தொழில்நுட்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் போட்டோக்களை வைத்து பிரத்யேகமாக, புதுமையாக என்ன செய்துவிட முடியும் என்று நண்பர்களும், இதர தொழில் முனைவோரும் இவர்களை கேலியாகப் பார்த்தார்கள். கெவினுக்கும், மைக்குக்கும் மட்டும் தங்கள் திட்டத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தது.
இரண்டு ஆண்டுகளாக ஆப்பிள் இயங்குதளத்திலேயே இயங்கிவந்த இன்ஸ்டாக்ராம் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி ஆண்ட்ராய்ட் தளத்துக்கான தனது அப்ளிகேஷனை வெளியிட்டது. வெளியிடப்பட்டு பன்னிரெண்டு மணி நேரத்துக்குள்ளாகவே சுமார் பத்து லட்சம் பேர் கூகுள்ப்ளே இணையதளம் மூலமாக இந்த அப்ளிகேஷனை தரவிறக்கினார்கள். அவ்வளவுதான், ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஃபேஸ்புக்கின் நிறுவனர் ஜூகர்பெர்க், இன்ஸ்டாக்ராமை கையகப்படுத்துகிறார். இப்போது இன்ஸ்டாக்ராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று கோடி. இதுவரை சுமார் பத்து கோடி படங்கள் இதன் மூலம் பகிரப்பட்டிருக்கின்றன.
Source: Puthiya Thalaimurai.






