Friday, June 8, 2012

கனவின் விலை 5000 கோடி!




இரண்டே ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் சம்பாதித்து அமெரிக்காவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் இரண்டு இளைஞர்கள்


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சான்பிரான்ஸிஸ்கோவில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது இன்ஸ்டாக்ராம் (Instagram). தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். இவர்களது கனவுக் குழந்தையான இன்ஸ்டாக்ராமை  சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது. விலைதான் இங்கே விஷயமே. ஒரு பில்லியன் டாலர். அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய்.

கெவின் சிஸ்ட்ரோம், 2006ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவர். கூகுளில் சில காலம் பணிபுரிந்துவிட்டு, பிற்பாடு ட்விட்டர் தளம் உருவாகியபோது அதில் பணியாற்றினார். இன்னொருவர் மைக். இவரும் ஸ்டான்போர்டில் 2008ல் பட்டம் வாங்கியவர். கெவினை விட இளையவரான இவர் இன்ஸ்டாக்ராம் தொடங்குவதற்கு முன்பாக ஏதோ ஒரு சுமாரான நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றினார்.

ஸ்டான்போர்டின் முன்னாள் மாணவர்கள் என்கிற ஒற்றுமை தவிர்த்து, இருவரையும் இணைத்தது ஒரு கனவு. சொந்தமாக ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பணிகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று பல்வேறு யோசனைகளை பரிசீலித்தார்கள். கடைசியாக மொபைல் கேமராவில் எடுக்கப்படும் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எளிமையான ஒரு அப்ளிகேஷனை உருவாக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஏற்கெனவே யாஹூவின் ஃப்ளிக்ஆர் இணையதளம் உலகின் முதல் ஐம்பது இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கிறது. போட்டோக்களை பகிர்ந்துகொள்ள ஏராளமான தொழில்நுட்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் போட்டோக்களை வைத்து பிரத்யேகமாக, புதுமையாக என்ன செய்துவிட முடியும் என்று நண்பர்களும், இதர தொழில் முனைவோரும் இவர்களை கேலியாகப் பார்த்தார்கள். கெவினுக்கும், மைக்குக்கும் மட்டும் தங்கள் திட்டத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தது.


இன்ஸ்டாக்ராம் அக்டோபர் 2010ல் இயங்கத் தொடங்கியது. ஐபோன், ஐபேட், ஐபாட் டச் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் வகையிலேயே முதலில் உருவானது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பு என்னவென்றால், மொபைலில் எடுக்கப்படும் போட்டோக்களை போனிலேயே திருத்தி, அளவு மாற்றி, அலங்கரித்து உடனடியாக உலகம் முழுக்க பகிர்ந்து கொள்ள முடியும். குறுகிய காலத்திலேயே அடுத்த இரண்டு மாதங்களில் பத்து லட்சம் பேர் இன்ஸ்டாக்ராமை பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் இன்ஸ்டாக்ராமுக்கு மாறினார்கள். 2011ம் ஆண்டின் சிறந்த ஆப்பிள் அப்ளிகேஷனாக இன்ஸ்டாக்ராமை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

இரண்டு ஆண்டுகளாக ஆப்பிள் இயங்குதளத்திலேயே இயங்கிவந்த இன்ஸ்டாக்ராம் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி ஆண்ட்ராய்ட் தளத்துக்கான தனது அப்ளிகேஷனை வெளியிட்டது. வெளியிடப்பட்டு பன்னிரெண்டு மணி நேரத்துக்குள்ளாகவே சுமார் பத்து லட்சம் பேர் கூகுள்ப்ளே இணையதளம் மூலமாக இந்த அப்ளிகேஷனை தரவிறக்கினார்கள். அவ்வளவுதான், ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஃபேஸ்புக்கின் நிறுவனர் ஜூகர்பெர்க், இன்ஸ்டாக்ராமை கையகப்படுத்துகிறார். இப்போது இன்ஸ்டாக்ராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று கோடி. இதுவரை சுமார் பத்து கோடி படங்கள் இதன் மூலம் பகிரப்பட்டிருக்கின்றன.




Source: Puthiya Thalaimurai.

Tuesday, June 5, 2012

காமசூத்ரா, நியாயசூத்ரா மற்றும் வாத்ஸ்யாயனா




தலைப்பில் உள்ள முதல் வார்த்தை பற்றி விளக்குவதற்கான தேவை இப்போது இல்லை, அது எல்லோருக்கும் பரிச்சயமானதே.

மற்ற இரண்டு வார்த்தைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன் இந்தப் பதிவை எழுதத் தூண்டிய கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ மௌலிக்கு என் நன்றிகள்.


’காமசூத்ரா’ என்று சொன்னவுடன் பொதுவாக அனைவருக்கும் ஒரு புன்முறுவல் வருவதுண்டு. சிலருக்கு அந்த வார்த்தையை பொதுவில் சொன்னால் சிறு சங்கடம் வருவதைக் கூடப் பார்த்திருக்கிறேன்.. வாழ்நாளில் ஒரு முறையேனும் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கூட சிலருக்குத் தோன்றலாம். (அந்த ஒரு சிலரில் அடியேனும் ஒருவன்.!)


திருக்குறள் எழுதியது திருவள்ளுவர், சிலப்பதிகாரம் இயற்றியது இளங்கோவடிகள் என்று தெரிந்து வைத்திருக்கும் நாம் என்றாவது ‘காமசூத்ரா’ எழுதியது யார் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்பது சந்தேகமே. இதற்கு முன் ‘காமசூத்ரா’ என்பது ஒரு குழுவாக சிலர் இயற்றியது என்றே நினைத்துவந்தேன்.


ஒருநாள் அலுவலகத்தில் பொழுது போகாமல் ‘you tube'-ல் கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ பார்க்க வேண்டிய நிர்பந்தம். ;) அந்தப் படத்தில் ‘மன்மதன் நாயுடு’ என்ற கதாபாத்திரத்தில் ‘மௌலி’நடித்திருப்பார். மௌலியின் கதாபாத்திரம் பெண்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். மௌலி அடிக்கடி ‘வாத்ஸ்யாயனா’ ‘வாத்ஸ்யாயனா’ என்று சொல்லிக் கொள்வார்.

ஒரு காட்சியில் கமல் மௌலியிடம் கேட்பார்: “அதென்ன வார்த்தைக்கு வார்த்தை வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா-ன்னு சொல்றீங்க.??”
மௌலி: “ஒவ்வொருத்தருக்கும் விநாயகர், வெங்கடாசலபதி, முருகன் மாதிரி எனக்கு வாத்ஸ்யாயனா Favorite God...காமசூத்ரா எழுதினவர்” என்பார்.

அப்போது தான் உரைத்தது “If there is a creation, there should be a creator" ;) :P



உடனே நண்பர் Wikipedia-வைத் தொடர்பு கொண்டு ‘வாத்ஸ்யாயனா” பற்றி ஆராய்ந்த போது தெரியவந்தது அவர் 'கௌதம ரிஷி’-யின் ‘நியாயசூத்ரா’-வை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்று.


‘நியாய சூத்ரா’-வின் தொடக்கத்திலேயே அதன் முக்கிய நோக்கம் என்பது ப்ரமண,ப்ரமேய,ப்ரயோஜன,சித்தாந்த,தர்க்க போன்ற பதினாறு பிரிவுகளில் சுதந்திர அறிவு பெறுவது தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (source: wikipedia: In the opening sūtra of the Nyāya Sūtra, it was claimed that the ultimate purpose of it is the attainment of liberation (niḥśreyasa), attained by knowledge of the sixteen categories (padārtha)[4)
மேலும் ‘நியாய சூத்ரா’ தர்க்க-வித்யா (Science of Debate) மற்றும் வாத-வித்யா (Science of Discussion) என்றும் அழைக்கப்படுகிறது.


வாத்ஸ்யாயனா கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கும் - கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறார். சில ஆய்வுகள் அவர் கி.மு.150-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றன. வாத்ஸ்யாயனாவின் காலம் குறித்த சரியான தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை..



அது சரி.. ‘காமசூத்ரா’ famous ஆகி விட்டது. ஆனால் ‘வாத்ஸ்யாயனா’ மட்டும் ஏன் famous ஆகவில்லை என்று தோன்றியது.  நியாயமான கேள்வி தானே..??!!!


”வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா..!!!!”  :)