அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புது வருடம் இன்னும் இரு தினங்களில் ஆரம்பிக்கப் போகிறது. இந்த நேரத்தில் கடந்த வருடத்தை ஒரு மீள்பார்வை செய்வது நமக்கு வழக்கமான ஒன்றே..
அந்த வகையில் நான் 2011-ம் வருடம் வெளியான படங்களில் இருந்து என் மனதைக் கவர்ந்த சில பாடல்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ்வீராக..!!
இதுவே உங்களுக்கான என் புத்தாண்டு வாழ்த்து மற்றும் பரிசு..!! :-)
முதலில் நம் எல்லோருக்கும் விருப்பமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். இந்தப் பாடல் அநேகமாக அனைவருக்கும் பிடித்ததே.. அது தவிர இதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணும் இணைந்து சில வரிகள் பாடியிருப்பார். இவரது குரல் தந்தையின் குரலை பெரும்பாலும் ஒத்திருக்கும். எஸ்.பி.பி.சரண் “அலைபாயுதே” படத்தில் பாடிய “காதல் சடுகுடு” பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காதது என்னுடைய தனிப்பட்ட வருத்தம்.
இப்போது: “அய்யய்யோ நெஞ்சு அலையுதடி”
அடுத்து புதிய முயற்சியைப் பாராட்டும் விதமாக "எங்கேயும் எப்போதும்" படத்திலிருந்து பெரும்பாலானோரின் இஷ்ட தெய்வமான "கோவிந்தா, கோவிந்தா" பாடல்.. :-)
இந்தப் பாடல் முழுவதுமே முதலில் தொடங்கும் இசையில் இருந்து, வரிகளும் மற்றும் காட்சி அமைப்புகளும் சரி ஒரு தனிப்பட்ட சிந்தனை.
அதில் நான் கேட்டு ரசித்தது "இவள் வந்த போது வந்த கோபம் இப்போ இல்லையடா..இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள் 202-tum times times" ;)
அடுத்த பாடல் சாந்தனு மற்றும் சந்தானம் நடித்த "கண்டேன்" படத்திலிருந்து.. நிறைய பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதில் உள்ள சில பாடல்கள் அருமை. அதில் ஒன்று "உனைக் கண்டேனே..எனைத் தந்தேனே" எனத் தொடங்கும் பாடல். இதில் மலேசியா-வைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஹிப்-ஹாப் ரகமான ஒரு பல்லவி பாடுவதும் அருமை..
அடுத்து காதலர்கள் அனைவருக்கும் பிடித்த, ஜீவா நடித்த "கோ" படத்திலிருந்து "என்னமோ ஏதோ" பாடல். மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலில் வரும் "குவியமில்லா" "காட்சிப் பேழை" போன்ற வார்த்தைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
எனக்கு மிகவும் பிடித்த வரி "சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்".
அடுத்த பாடல் பெரும்பாலான கானா ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்த, "வானம்" படத்தில் சிம்பு பாடிய "No Money, No Honey" பாடல். பல திறமைகளைக் கொண்ட சிம்பு-வின் பாடலுக்கு எப்போதும் நான் ஒரு ரசிகன் ;)
அடுத்த பாடலும் ஒரு கானா பாடல் தான். இந்தப் பாடல் பிரபு நேபால்-இன் "மைனா" படத்திலிருந்து "ஜிங்கு ஜிக்கா" பாடல். ஒரு நாட்டுப்புறப் பாடலின் சாயலில் பாடப்பட்ட பாடல் என்பதால் தமிழ்நாட்டில் அதிகமாக ஒலிக்கப்பட்ட ஒரு பாடல்.
அடுத்து ஒரு இனிய கீதம். "எங்கேயும் காதல்" படத்தில் இருந்து "நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ".. காதலர்கள் அனைவரையும் கவர்ந்த பாடல். வரிகளும், இசையும் இனிமை, அருமை.
அடுத்த பாடலும் "எங்கேயும் காதல்" படத்திலிருந்து.. "தீ இல்லை, புகை இல்லை, ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே" பாடல். இந்த பாடலின் தொடக்க இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இசையும், வரிகளும் அருமை, இனிமை..
அடுத்து ஒலிக்க இருப்பது "180 " படத்தில் மதன் கார்க்கி எழுதிய "நீ கோரினால் வானம் மாறாதா" எனத் தொடங்கும் பாடல். இந்த படமே ஒரு வண்ணமயமான படம். தெலுங்கு படங்களான "நுவ்வு ஒஸ்தானண்டே நேநு ஒத்தண்டானா” “பொம்மரிலு” படங்கள் மூலமாகப் பிடித்துப் போன ஒரு நடிகர் சித்தார்த். நாயகி பிரியா ஆனந்த் பார்த்தவுடன் பிடித்துப் போகும் ஒரு முகம், அது மட்டுமில்லாமல் Cadbury's dairy milk chocloate விளம்பரம் மூலம் பரிச்சயம் ஆனவர். இதில் அவரது உடைத் தேர்வுகள் அழகு. சித்தார்த்தின் உடைத் தேர்வுகளும் அழகு. (பீட்டர் இங்கிலாந்த் என்று நினைக்கிறேன்) :-)
நநநானா நநந நநானா என்று இந்தப் பாடல் தொடங்குவது அருமை. வழக்கமான பாடல்கள் போல் ஒரே பல்லவியை நாயகன் ஒரு முறை, நாயகி ஒரு முறை பாடுவது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாய் சரணத்தை நாயகி மெதுவாகப் பாடுவார், நாயகன் அதை கொஞ்சம் வேகமாக மேற்கத்திய இசை பாணியில் பாடுவார். மற்றொரு அம்சம் இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். ஏனெனில் இதில் சித்தார்த், பிரியா ஆனந்திற்கு நிறைய பரிசுப் பொருள்கள் தருவார் ;-)
இப்போது "மௌனகுரு" அருள்நிதி நடித்து வெளிவந்த ஒரு சிலிர்ப்பூட்டும் படம். அருள்நிதிக்கு தமிழ்நாட்டின் தெற்கு மாவட்ட மக்களின் முக அமைப்பு. இதனால் "வம்சம்" படம் மூலமாகவே இவரைப் பிடித்து விட்டது. இவரின் நடிப்பும் ஒரு இயல்பான ஒன்று. இவர் பேசுவது சில சமயம் குழந்தை போல் கெஞ்சி கெஞ்சி பேசுவது போல் இருக்கும் :) "மௌனகுரு" படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் மட்டுமே. மூன்றுமே நல்ல பாடல்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "என்ன இது என்ன இது தொல்லை". நாயகி "இனியா" 'வாகை சூட வா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.
அடுத்து "வாகை சூட வா". இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "போறானே போறானே, காத்தோடு தூத்தலப் போல போறானே" பாடல். வட்டார மொழிகள் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களில் பயன்படுத்தப் படுவதில்லை என்பது என் கருத்து. இந்தப் பாடலில் வரும் "தூத்தல்' என்ற வார்த்தைக்காகவே எனக்குப் பிடித்து போயிற்று. இந்தப் பாடல் காட்சியாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கும்.
இந்தப் பாடலின் HD காணொளி கிடைக்கவில்லை. கீழிருக்கும் காணொளியின் தரம் பரவாயில்லை ரகம் தான். :-(
அடுத்து "ரௌத்திரம்" படத்திலிருந்து மனதை வருடிச் செல்லும் "மாலை மங்கும் நேரம், ஒரு மோகம் கண்ணின் ஓரம்" பாடல். முதல் முறையாக ஸ்ரையாவின் கவர்ச்சி காமத்தைத் தூண்டாமல் கணவன்-மனைவி இடையே ஒரு அன்யோன்யத்தை உருவாக்கும்படியாக இருக்கும் பாடல் :) மற்றபடி ஒரு மிருதுவான வருடிச் செல்லும் பாடல் வரிகள்.
அடுத்து "குள்ளநரிக் கூட்டம்' படத்திலிருந்து "விழிகளிலே விழிகளிலே" பாடல். அருமையான பாடல் வரிகள் மற்றும் இதமான இசை இந்தப் பாடலின் சிறப்பு. மற்றொரு சிறப்பு படம் மதுரையில் எடுக்கப்பட்டது. :) நாயகி ரம்யா நம்பீசனின் சுடிதார் தேர்வுகள் அருமை.
அடுத்து சிம்பு பாடிய ஒரு மேற்கத்திய பாணியிலான பாடல். "மம்பட்டியான்" படத்திலிருந்து "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே" பாடல். சிம்பு-வின் குரல் தான் இந்தப் பாடல் எனக்குப் பிடித்துப் போன ஒரே காரணம்.
அடுத்து "ஆடுகளம்" படத்திலிருந்து "ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா" பாடல். ஆட்டம் போடவைக்கும் இசை, குரல் மற்றும் காட்சி அமைப்பு இந்தப் பாடலின் வெற்றி. பாடல் வரிகள் மிகவும் இயல்பாக இருப்பது இன்னொரு அம்சம். இணையதளத்தில் இந்தப் பாடலுக்கு சில வெள்ளைக்காரர்கள் நடனமாடும் காணொளி கூட வெளியானது இந்தப் பாடலின் தாக்கம் எந்த அளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து சிம்பு-வின் "ஒஸ்தி" படத்திலிருந்து ஒரு பாடல். சமீபத்தில் இசையமைப்பாளர் 'தமன்' நன்றாக இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடித்த ஒன்று. அதில் முதலில் வெளியான "கலாசலா" பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் மல்லிகா ஷெராவத் இந்தப் பாடலின் சிறப்பம்சம். சிம்பு இந்தப்பாடலில் வரும் போது ஒலிக்கும் டி.ஆர். குரல் சிம்புவுக்கு ஒரு கெத்து கொடுக்கும் ;)
இந்தப் பாடல் வெளியான போது "ஜர்தா பீடா" என்ற வார்த்தை "பாம்பே அல்வா" என்று மாற்றப்பட்டது நல்லது தான். இல்லையென்றால் நம் வீட்டுக் குழந்தைகள் அதைப் பாடுவது மட்டுமில்லாமல் அது என்னவென்று வாங்கிப்பார்க்கவும் ஆசைப்பட்டிருப்பார்கள்.
அடுத்து விஜய் நடித்த 'காவலன்' படத்திலிருந்து "யார் அது, யார் அது" பாடல். மிக நீண்ட இடைவளிக்குப் பிறகு விஜய்-யின் நடிப்பில் ஒரு நல்ல படம். இந்தப் பாடலும், விஜய்-யும் அழகு. :) மற்ற படங்களைக் காட்டிலும் இதில் விஜய்-யின் உடைத் தேர்வுகள் பொருத்தமாய் இருக்கும்.
ஆங்கிலத்தில் "Last But Not Least" என்பார்கள். அது போல் இந்தப் பதிவை நிறைவு செய்யும் விதமாக "தல அஜித்"-இன் "மங்காத்தா" படத்திலிருந்து "மச்சி..Open the Bottle" பாடல். யுவனின் இளமை துள்ளும் இசை. பொதுவாக அஜித்-தின் நடனம் நன்றாக அமையாது அனால் இதில் அஜித்-தின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கும். அஜித்-தின் சிறப்பியல்பு{style} அழகு. இந்தப் பாடலின் தொடக்கப் பல்லவிக்கும், முதல் சரணத்திற்கும் இடையில் வரும் இசையும், அஜித்-தின் நடனமும் அருமை.
எல்லோருக்கும் போலவே கேட்டதும் பிடித்துப் போன சில பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் நமக்கு ஏமாற்றத்தைத் தரும். அதே போல் எனக்கும் கேட்கப் பிடித்து அப்புறம் காட்சிகளைப் பார்த்து ஏமாற்றம் அளித்தவை சில:
"மயக்கம் என்ன" படத்தின் பாடல்கள் மற்றும் "ஏழாம் அறிவு" படப் பாடல்கள்.
நண்பர்களே, என்னுடைய பாடல் தேர்வுகள் நிச்சயம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை என்பதால் இந்தப் பாடல்கள் எதையும் வரிசைபடுத்தவில்லை. மனதில் தோன்றிய பாடல்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தேன். இதில் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றிரண்டு விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.




