Thursday, January 19, 2012

இளையராஜாவா.?? ஏ.ஆர்.ரஹ்மானா.??





நான் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும் நேரம் தான் தொடங்கியது என் வாழ்வில் கேசட்டில் பாடல்கள் பதிவு செய்து கேட்கும் வழக்கம். படித்தது எலெக்ட்ரிக்கல் துறை என்பதால் என் நண்பன் கார்த்திக் உதவி கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வந்து வீட்டிலேயே டேப்-ரிக்கார்டர் செய்து முடித்தேன். முக்கால்வாசி பாடல்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கவர்வதாகவே இருந்து வந்தது J எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள நான்கைந்து வீடுகளுக்கும் நான் தான் ரேடியோ ஜாக்கி J அப்போது நண்பர்கள் இளையராஜா பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வது அவ்வளவு முக்கியமாகக் கருதியதில்லை.

இளையராஜாவின் பாடல்களுக்கு என்னைப் பழக்கப்படுத்தியது என் முத்து மாமாவும், அவரது நண்பர்களும் தான். அன்றைய நாட்களில் என் மாமா ஒரு டாடா எஸ்டேட் கார் வைத்திருந்தார். அதை விற்பதற்காக அவரும், அவருடைய நண்பர்களும் செங்குன்றத்திலிருந்து சென்னைக்குப் போகும் போது சில சமயம் நானும் கூடவே செல்வதுண்டு.. அந்த வண்டியில் இளையராஜா பாடல் கேசட் தவிர வேறு பார்ப்பது அபூர்வம். அப்படியே இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.

என்ன தான் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா கேட்டாலும் கடைசியில் களைத்துப் போகும் போது காது கொடுப்பது இளையராஜாவுக்கு மட்டும் தான் J

இளையராஜாவைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டார்கள். என் மனதில் பட்ட ஒரு சிலதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து சில பாடல்கள் அவரால் மட்டுமே உருவாக்க முடிந்தவை.
அப்படி நான் கேட்டு வியந்தது “சொல்லத் துடிக்குது மனசு” படத்தில் வரும் “பூவே செம்பூவே” பாடல். இதுநாள் வரை அந்த இசைக்கு மாற்று இசை கண்டு கொள்வது கடினம். இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் வயலின் இசை அவ்வளவு அருமையானது. பாடலையும் நன்றாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.





அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானது கல்லூரியில் படிக்கும் போது. ரஹ்மான் இசையமைத்தப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். அவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் ஐந்து பாடல்களுமே அருமையாய் இருக்கும். சில சமயம் அவரது இசைக்கு மட்டும் தான் படமும், பாடலும். 




கல்லூரியில் ஒரு கலைநிகழ்ச்சியில் இளையராஜவுக்கும், ஏ,ஆர்,ரஹ்மானுக்கும் போட்டி போன்று பாடல்களுக்கு நடனம் ஆடிய ஒரு குழு கடைசியில் இளையராஜா இசை தான் பெரியது என்று முடிக்கும் போது கூட்டத்தில் இருந்து “உடல் மண்ணுக்கு உயிர் ரஹ்மானுக்கு” என்று வேண்டுமென்றே கத்தியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. பெரியவர் எளியவருக்கும் போய்ச் சேரும் இசையைக் கொடுப்பார். சின்னவர் இசையில் புதிய நுணுக்கங்களைச் சேர்ப்பார்.

இளையராஜாவின் இசை முதல் தடவையே கவர்ந்து விடும் மாதிரியான எளிமையான, பழக்கப்பட்ட இசை.
ரஹ்மானின் இசை புதிதாய் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தடவைக் கேட்டால் மனதிற்குப் பழக்கமாகி விடும்.

ரஹ்மானின் இசை மிக அதிகமாக சத்தம் வைத்துக் கேட்கும் மனநிலையில் இருக்கும் போது அருமை.
இளையராஜாவின் இசை அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க வல்ல இசை.

இளையராஜாவா, ஏ.ஆர்.ரஹ்மானா என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில்: மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து விட்டால் கொஞ்ச காலம் பிழைக்க முடியும், வாழ முடியாது. 
வாழ்தல் பிழைத்தலை விட மேன்மையானது J

கடைசியாய் எனக்குத் தோன்றிய ஒன்று:

எனக்குத் தெரிந்து இளையராஜா சாயலில் வந்த ரஹ்மான் இசை:
“உயிரே” படத்தில் இருந்து “பூங்காற்றிலே என் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்” – இளையராஜாவின் இசை போன்ற இதமான பாடல்.

ரஹ்மான் சாயலில் வந்த இளையராஜாவின் இசை:
“ஹேராம்” படத்தில் வரும் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” – இந்தப் பாடலை இளையராஜா ஹங்கேரி இசைக்குழுவினருடன் சேர்ந்து மிக நுட்பமாய் இசையமைத்திருப்பார்.

No comments:

Post a Comment