Saturday, March 6, 2010

அவள் பெயர் தமிழரசி (வயது 18, மாநிறம்)

“அவள் பெயர் தமிழரசி” -- ஒரு திரைப்பார்வை.


தமிழ் சினிமாவில் சில தலைப்புகள் மிகவும் வித்தியாசமாக அமைந்து விடுவது உண்டு. அந்த தலைப்புகளை பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டிய ஆர்வத்தை தூண்டிவிடும். அப்படி ஒரு ஆர்வத்தை எனக்குள் உண்டைக்கிய படம் தான் அவள் பெயர் தமிழரசி. (வயது 18, மாநிறம்)

முதலில் இந்த மாதிரி படைப்புகளைத் தமிழில் எடுக்கத் துணிந்த மோசெர்பேர்(moserbaer) நிறுவனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் தந்த "பூ" திரைபடத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள். ஏன் என்றால் நல்ல கதை அம்சம் உள்ள படத்தை எடுத்ததற்காக.
சரி, இனி நாம் இந்தத் திரைபடத்தின் கதையைப் பார்ப்போம்.

படத்தின் கதை இளமை பருவத்தில் இருந்து தொடர்கிறது.
மெதுவாய் அதன் உண்மைநிலையில் இருந்து அழிந்து வரும் பெரும்பாலான கிராமத்துக் கலைகளில் ஒன்றான கூத்துக் கலையை மையமாய் கொண்டுள்ளது இந்தத் திரைப்படத்தின் கதைகளம். ஊர் ஊராகச் சென்று கூத்து நடத்தும் குடும்பத்தில் படத்தின் நாயகி(நந்தகி). அவர்கள் போகும் ஒரு ஊரில் படத்தின் நாயகனைப்(ஜெய்) பார்க்கிறாள். நாயகன் ஊர் பெரியவரின் மகன். நல்ல வசதியான வீட்டுப் பையன். தாத்தாவின் அரவணைப்பில் வளரும் அவன் ஒரு நாள் கூத்து பார்க்கச் செல்கிறான்.

பார்த்தவுடன் பிடித்து விடுகிறது(கூத்து மட்டுமல்ல). நாயகியிடம் பேசிப் பழக ஆரம்பிக்கிறான் நாயகன். ஒரு ஊரில் பத்து நாட்களுக்கு மேல் அவர்கள் கூத்து நடத்த மாட்டார்கள். அவர்கள் அந்த ஊரைக் காலி செய்யும் முன் அவளிடம் பழகியதாகத் தன் தாத்தாவிடம் சொல்லி அந்த ஊரில் நாயகி குடும்பத்தை இருக்கும்படி ஏற்பாடு செய்கிறான் நாயகன்.

இளம் வயதில் வரும் உணர்வுகள் அவனை ஆட்கொள்கிறது.
இந்த இடத்தில் பருத்தி வீரன், அழகி மற்றும் தமிழ் M. A நினைவுகள் வந்து செல்கிறது நம் மனதில். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.
வழக்கம் போல நாயகி தான் நன்றாக படித்து மாநிலத்தில் முதலாவதாக வருகிறார். நம்ம ஹீரோ பெயில் ஆகி விடுகிறார். எங்கே அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்ற பயத்தில் அவள் தன்னை விட்டு விலகிப் போக முடியாத படி ஒரு மோசமான காரியத்தை செய்கிறான் அவன்.

அந்த ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது. குற்ற உணர்சியில் அவளைத் தேடி நாயகன் அலைகிறான். அவளைக் கண்டானா? இவனை அவள் ஏற்றுக் கொண்டாளா? இதுவே இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

படம் பார்க்கும் போது பல காட்சிகள் மனதைத் தொடுபவையாக இருந்தன. படம் பார்க்கையில் என்னுடைய பள்ளித் தோழர்கள்,தோழிகள் பலரும் என் ஞாபகத்தில் வந்து போனார்கள். ஜெய் கொடுத்த வேலையை ஏதோ செய்திருக்கிறார். நாயகி நந்தகி, புதுமுகம். அலட்டல் இல்லாத நடிப்பு. நிறைவாக செய்து உள்ளார். கஞ்சா கருப்பு காமெடி ரசிக்க வைத்தது.

படத்தின் ஒளிபதிவர் பி.ஜி.முத்தையா அருமையாக செய்துள்ளார்.

பின்னணி இசை விஜய் ஆண்டனி, கிராமத்து இசையை முயற்சி செய்துள்ளார். வாழ்த்துக்கள். ’குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி’ மற்றும் ’நீ ஒத்த சொல்லு சொல்லு’ பாடல்கள் நன்றாக உள்ளது.

கதை,திரைக்கதை,எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் மீராகதிரவன்,

கிராமத்தின் மண் வாசனையும்,நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் கிராமத்து அடையாளங்களையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

அவள் பெயர் தமிழரசி - கிராமத்துக் காவியம்.
-- நண்பர் ராஜா அண்ணாமலை

பின்குறிப்பு: நாங்க எந்த படத்துக்கும் மார்க் போட மாட்டோம். ஏன்னா நாங்களே பரீட்சையில் ஒழுங்காக மார்க் வாங்கினது கிடையாது. இந்த விஷயத்துலேயும் நாங்க ரொம்ப நேர்மையானவங்க தான் :)

No comments:

Post a Comment