Sunday, March 14, 2010

தனிமையின் மீளாத் துயர்


பொலிவிழந்த
வீட்டின் வண்ணங்கள்
உதிர்ந்த சுவர் போல
உலர்ந்து போகிறது வாழ்க்கை
நீயற்ற நேரங்களில்...

நீ இல்லாத இரவின் நிசப்தங்கள்
எவ்வளவு கொடுமை என்று உனக்குத்
தெரிய வாய்ப்பில்லை...


விளக்கை அணைத்தபடி என்
வீட்டுக் கடிகாரத்தின் வினாடி முள்ளின் சப்தத்தில்
எளிதாய் கடந்து செல்லும் காலத்தை எண்ணிக்
கொண்டிருக்கிறேன்.

கடைசியாய் உன்னுடன் உறவாடிய
என் வார்த்தைகள் எனக்குள்
தானே ஒலித்துச் செல்கின்றன ஓயாமல்...

இன்னும் நீளுமா தெரியவில்லை
இந்த இரவு, ஆனால் என் உயிர் வாட்டும்
உன் பிரிவின் துயர் மட்டும் குறைய வாய்ப்பில்லை...


என் தனிமையின் கொடுமையை உனக்கு
எடுத்துரைக்க சந்தர்ப்பங்கள் அநேகமாய்
அண்மைக் காலத்தில் எதுவும் இல்லை.


இனிமேல் என்னுடன் பேச எதுவும் இல்லையென்று
சொல்லி விட்டாய்.

உன்னைப் பார்த்ததும்
உன் காலடியில் விழுந்து நொறுங்கக்
காத்திருக்கின்றன என்னுடைய சில மௌனங்கள்...


மழை விட்டிருந்த ஒரு மாலைப் பொழுதில்,
எப்போதும் போலவே இப்போதும் உன்னை
நினைத்துக் கொண்டே என் வீட்டு மொட்டை மாடியில்
நடந்து கழிக்கும் ஒரு பொழுதில், எங்கோ,
எப்படியோ உதிர்ந்து காற்றில் திக்கற்றுத்
திரியும் பெயர் தெரியாத ஒரு பறவையின் சிறகு என்னிடம்
உரைத்துச் செல்கின்றது,
தனிமையின் மீளாத் துயரை...
Photo Info:
Model: Mani Kalra (My collegue)
Place: Chennai Muttukadu Boat club
Date: 07-oct-2009

No comments:

Post a Comment