Saturday, March 6, 2010

திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

புதுசா பதிவு ஆரம்பிச்சு பால் காய்ச்சுறோம், முதல் பதிவு நல்ல பதிவா போடணும்.
என்ன எழுதலாம், யாரைப் பத்தி எழுதலாம்னு யோசிச்சு ஒரு வழியா எனக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் தான் நினைவுக்கு வந்தார். அதனால அவரை வச்சே 'அ”-னா போட்டுரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

அவரைப் பற்றி விமர்சிக்கிற பதிவு இல்லை இது. அந்தத் தகுதியும் எனக்குக் கிடையாது. அவரைப் பார்த்து வியந்த செய்திகளை ஒரு ரசிகனாய் பதிவு செய்யும் முயற்சி தான் இது.



எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களில் தான் எஸ்.ராமகிருஷ்ணனைத் தெரியும் ஆனந்த விகடனில் வெளிவந்த ”துணையெழுத்து” தொடர் மூலமாக. அப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடனைப் பத்திரப்படுத்தி வைப்பேன். அவருடைய எழுத்துக்களில் எப்பொழுதும் ஒரு எதார்த்தம் இருக்கும்.

வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களை, நிகழ்வுகளை அருமையாக விவரிப்பார். அதிலேயே அவரை ரொம்ப பிடிக்க ஆரம்பித்திருந்தது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று வியப்பாக இருக்கும்.

அதற்கடுத்து தொடராய் வந்த “கதாவிலாசம்” மற்றும் “தேசாந்திரி” கூட மிகவும் பிடித்தது. அவரைப் போலவே ஊர் சுற்றும் ஆசையும் நெஞ்சில் துளிர்விடத் தொடங்கியது. அவரைப் போல ஒரு தேசாந்திரி ஆகவேண்டுமென்று கூட ஆசைப்பட்டதுண்டு.

சிறிது காலம் கழித்து தான் அவருடைய சொந்த ஊர் என்னுடைய சொந்த ஊரான ‘விருதுநகர்’ அருகிலுள்ள ‘மல்லாங்கிணறு’ என்பது தெரிய வந்தது.
அவருடைய எழுத்துக்களில் எங்கள் ஊர் வாசனையை உணரத் தொடங்கினேன்.

எஸ்.ராமகிருஷ்ணனை எனக்கு மிகவும் பிடிக்க இன்னொரு முக்கியக் காரணம். அவர் இதுவரை யாரைப் பற்றியும் குறை கூறி எழுதிப் பார்த்ததே இல்லை. வெறும் பெயருக்காகவும், பரபரப்புக்காகவும் எழுதுபவர் அல்லர்.

அவருடைய ஆரம்பக் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவ்வளவையும் அனுபவங்களாய் மாற்றிக் கொண்ட ஒரு மனிதர்.
வாழ்க்கையை மிகவும் ரசிக்கக் கூடிய ஒரு மனிதர். அந்த ரசனையை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதில் வல்லவர் அவர். அந்த எழுத்தின் மூலம் அந்த ரசனையை உங்களுக்குள்ளும் உணரச் செய்பவர். உலக மொழிகளில் உள்ள புத்தகங்கள் பெரும்பாலும் படிக்கக் கூடியவர் என்பது அவருடைய கதைகளில், நாவல்களில் அவர் நினைவு கூறும் சம்பவங்களும், சிறு கதைகளுமே சாட்சி.

அவருடைய உலக சினிமாக்கள் பற்றிய செய்திகளைப் படித்து அந்தந்த படங்களை அவ்வப்போது தேடித் தேடிப் பார்த்து வருகிறேன்.

என்னியோ மோரிக்கோனும்(Ennio Morricone), செர்ஜியோ லியோனியும்(Sergio Leone) அவரிடம் இருந்து தெரிந்து கொண்டவர்கள் தான். அவருடைய வலைதளத்தில் அவர் எழுதிய கட்டுரையைப் படித்த பிறகு என்னியோ மோரிக்கோனின் இசைக்கோர்வைகளை இணையத்தில் தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். மிகவும் மனதைத் தொடுகிற இசை. 1928-ல் பிறந்த மனிதர் 82 வயதாகியும் இன்னும் ஓய்வெடுக்காமல் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி ஒரு இசைவிழாவை லண்டனில் நடத்தப் போகிறார். இவரைப் பற்றி தனிப் பதிவு விரைவில்.

அதே போல் பீத்தோவன், விவால்டி பற்றிப் படித்து விட்டு உடனே கிளம்பிப் போய் விவால்டி மற்றும் பீத்தோவன் குறுந்தகடுகளை வாங்கி வந்து கேட்டிருக்கின்றேன்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இரவும், அதன் தனிமையும் மிகவும் பிடிக்கும் என்றே தெரிகிறது. பெரும்பாலான கதைகளில் இரவை அவர் விவரிக்கிற அழகே தனி. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தின் வழியாக அவர் வர்ணிக்கிற இரவைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன். நானும் அந்த இரவை ரசித்துக் கழித்திருக்கிறேன்.

அவர் கதை, வசனம் எழுதி மனோகர் என்பவர் இயக்கிய “கர்ண மோட்சம்” என்ற குறும்படம் பார்த்து கண்களில் ஈரம் கண்டிருக்கிறேன். இந்தக் குறும்படம் ‘தேசிய விருது’ பெற்றக் குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால எழுத்தாளர்களில் மிகவும் ஆளுமையான ஒரு எழுத்தாளராய் வாழ்ந்து வருகிறார் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் காலத்தில் நாமும் வாழ்ந்ததாய் மிகவும் பெருமைகொள்கிறேன். இது ஒரு மாதிரிப் பதிவு தான். அவரைப் பற்றி இன்னும் நிறைய பதிவு எழுதலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் இன்னும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம். அவருடைய எழுத்துக்கள் மூலம் நாமும் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாய் ரசிக்கத் தொடங்குவோம்.

எஸ்.ராமகிருஷ்ணன் வலைதளம்: sramakrishnan.com

நன்றி.

4 comments:

  1. Liek your sharp,classic usage of words... dont find a non0meaningful sentence .. Good work .. keep it up.

    And something about Ramakrishnan as well,
    Samugathin meethana ennudaiya paarvaiyay thiruthi amaithathil, ivar en GURU'maargalil oruvar.

    ReplyDelete
  2. Thanks Ramesh & Bala.

    Bala: The word verification was changed.

    ReplyDelete