
இந்தக் குறும்படத்தை ஒரு வருடத்திற்கு முன் இணையத்தில் பார்த்தேன். இப்போது பார்த்தாலும் முதல்முறை பார்த்த உணர்வு தான் ஏற்படுகிறது.
அழிந்து வரும் கலைகளில் ஒன்றான கூத்துக் கலையின் இன்றைய நிலையை எடுத்துரைக்கிறது இந்தக் குறும்படம்.
கர்ணன் வேடம் போடும் கூத்துக் கலைஞர் கோவிந்தன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கூத்து நிகழ்ச்சி நடத்துவதற்காக வருகிறார். கூடவே அவரது மகன் சிறுவன் கதிரையும் அழைத்து வருகிறார். சிறுவன் கதிர் வரும் போதே தனக்கு கிரிக்கெட் மட்டை வேண்டும் என்று கேட்கிறான். கூத்து முடிந்தவுடன் வாங்கித் தருவதாக சொல்லி கதிரைக் கூட்டிச் செல்கிறார் கோவிந்தன்.
பள்ளிக்கு சென்று பார்த்தால் விடுமுறை போல் தெரிகிறது. அங்கிருக்கும் காவலாளி பள்ளி நிறுவனர் இறந்து விட்டதால் இன்று பள்ளிக்கு விடுமுறை என்கிறார். அந்தக் கணத்தில் கோவிந்தனின் முகபாவனைகள் அவர் முகத்தில் போட்டிருக்கும் வர்ண ஒப்பனையைத் தாண்டி நம் மனதைத் தொடுகிறது.
அந்தக் காவலாளியிடம் இருந்து பள்ளி முதல்வரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் கோவிந்தன். அப்போது தொலைபேசியில் ஒலிக்கும் சினிமா பாடல் ஒரு நல்ல நையாண்டி.
பள்ளி முதல்வர் கோவிந்தனிடம் பள்ளியின் நிறுவனர் இறந்து விட்டதால் அடுத்த மாதம் வரச் சொல்கிறார். கோவிந்தன் தான் வெறும் ஐம்பது ரூபாயுடன் கிளம்பி வந்து விட்டதாகவும் ஏதாவது பண உதவி செய்யுமாறும் பள்ளி முதல்வரைக் கேட்டுக் கொள்ள அவர் தான் தற்சமயம் வீட்டில் இல்லை என்றும் இரவு ஏழு மணிக்குத் தான் வீடு திரும்புவதாகவும் சொல்கிறார். அதற்கு கோவிந்தன் தான் அதுவரை காத்திருந்து அவரைப் பார்த்துச் செல்வதாகச் சொல்கிறார்.
தொலைபேசியில் பேசிவிட்டு அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் கதிரைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறார் கோவிந்தன். கதிர் தனக்கு கிரிக்கெட் மட்டை இப்போதே வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு கோவிந்தன் அவனிடம் இன்னும் பணம் கிடைக்கவில்லை பிறகு வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு நகர சிறுவன் கதிர் அவரை நோக்கிக் கை நீட்டி "யோவ் நீயெல்லாம் ஒரு கர்ணனா" என்று கேட்கும் போது முகத்தில் அறைந்தாற் போல் உள்ளது. மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் நம்முடைய கலைகளின் அடையாளத்தை மொத்தமாய் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.
வழியில் உள்ள ஒரு நடைபாதைக் கடையில் கதிருக்கு ஒரு வடை வாங்கிக் கொடுத்து விட்டு தான் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடிக்கிறார் கோவிந்தன். இன்னொரு டம்ளர் தண்ணீர் கேட்க கடைக்காரர் மறுத்து விட பக்கத்தில் இருக்கும் ஒரு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்கிறார். அப்போது அந்தக் கடையில் வேலை பார்க்கும் ஊமைச் சிறுமி கோவிந்தனுக்குப் பரிச்சயமாகிறாள். அவள் கோவிந்தனுக்கு கடைக்காரன் அறியாமல் இரண்டு இட்லிகளைக் கொண்டு வந்து தருகிறாள். இதைப் பார்க்கும் போது மனிதர்களின் ஆசைகளும், மோகங்களும் அதிகரித்து விட்ட இந்தக் காலத்தில் கர்ணன் இருந்தால் அவனும் தானம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவான் போலத் தோன்றுகிறது.
அந்தச் சிறுமியைக் கண்டு மகிழ்ச்சியடையும் கோவிந்தன் அவளிடம் தான் செஞ்சி துரைசாமி தம்பிரானிடம் காணிக்கை வைத்து கூத்துக் கற்று கொண்டதாக பெருமையுடன் சொல்கிறார். அவளுக்கும் கூத்து கற்றுக்கொடுக்க விரும்பி அவளை அவருடன் சேர்ந்து ஆடச் சொல்கிறார். அப்போது அங்கு வரும் கடைக்காரன் கோவிந்தனைத் திட்டி விட்டு, சிறுமியைக் கன்னத்தில் அறைந்து கூட்டிச் செல்கிறார்.
மிகுந்த மன வலியுடன் அங்கிருந்து நடந்து செல்கிறார் கோவிந்தன். அவர் சிறிது தூரம் செல்கையில் அந்தச் சிறுமி அவரிடம் ஓடிச் சென்று ஒரு ரூபாய் கையில் தந்து அவரை வணங்கி விட்டு அவரை தன் குருவாய் உணர்த்தி விட்டு மறுபடியும் அவள் வேலை செய்து கொண்டிருக்கும் நடைபாதைக் கடைக்கே ஓடிவிடுகிறாள்.
இதற்குப் பிறகு கோவிந்தன் அகமகிழ்ந்து பெருமையாய் நடக்கத் தொடங்குகிறார். அப்போது சாலையில் இவரை அதிசமாய் பார்க்கும் சிறுவர்களிடம் தன் தலைக்கவசத்தைக் கொடுத்து விட்டு உண்மையான கர்ணனைப் போலவே நடந்து செல்கிறார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கதை, வசனம் எழுதி இயக்குனர் முரளிமனோகர் இயக்கிய இக்குறும்படம் தேசிய விருது பெற்ற குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காட்சியில் சிறுவன் கதிர் கீழே கிடக்கும் ஒரு பொம்மைக் கைபேசியை எடுத்து பெப்சி உமாவுக்கு போன் செய்து பேசுவது போல செல்வதும், கோவிந்தன் அந்தச் சிறுமியிடம் ’டி.வி பெட்டி வந்து எல்லாத்தையும் முழுங்கிடுச்சு’ என்று பெருமுச்சுடன் சொல்வதும் ஒரு வணிகத்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணரச்செய்கிறது.
நமது பாரம்பரியக் கலைகளின் தற்போதுள்ள சீரான அழிவு நிலையை முழுமையாக உணர்த்துகிறது இந்தப் படம்.
இப்போதுள்ள சிலர் தங்களது சுயலாபத்திற்காக தமிழ், தமிழ் உணர்வு என்று நடத்தும் நாடகங்களை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு நமது பாரம்பரியம், கலைகள் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் அவைகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத்தக்கதே.
உங்களுக்காக Youtube வீடியோ இங்கே:
Part 1:
Part 2:
நன்றி.

Intha kuram padam mulukka pesaathathaal, avalai oomai endru kooriyuleergal.aanal karnanidam pesi chendraaley.. avalakku kooruvatharku antha idli kadai kaararidam(thaneer kooda aadambaramaagivitta manithanidam) yethum illai endrey unarkiren. intha (A)naagareega samugathil, unarvugalai/uravugalai mathipavargal/valarpavargal, oomaigalaaki pokirarkal.(pesa virumbaathathaal),,,
ReplyDelete:-)
ReplyDeleteவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ரமேஷ்.